logo
home பலன்கள் ஏப்ரல் 27, 2018
சித்திராபௌர்ணமியின் சிறப்புகளும், பூஜை முறைகளும், பலன்களும்
article image

நிறம்

சித்ரா பௌர்ணமி நாளையொட்டிதான், ஸ்ரீசொக்கநாதர்- ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும். சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் செய்யும் வைபவமும் நடைபெறுகிறது. குற்றாலத்திலுள்ள செண்பகாதேவிக்கு சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். அப்போது சந்தன வாசனையோடு கூடிய மழை பெய்யும் என்பது ஐதீகம்! திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, சித்தர்கள் பலர் வசிப்பதாகக் கூறப்படும் கஞ்சன் மலையில் சித்திரைப் பெளர்ணமியன்று அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். இந்த மலையில் வசிக்கும் சித்தர்கள் மலைக்கோயில் அருகிலுள்ள நீரூற்றிலும், மலைமேலுள்ள சித்தேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி, வான்வழியாக கஞ்ச மலையை நட்சத்திரங்கள் போன்று வலம்வருவதாக ஐதீகம்! இரவு 11 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரை மெதுவாக நகர்ந்துகொண்டே வந்து பின்னர் மறைந்து விடுகிறது இந்த நட்சத்திர ஒளி. சித்திரகுப்தன், சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பாளை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று சித்ரகுப்தனுக்கு பூஜை செய்வது சிறப்பு. காஞ்சிபுரத்தில் அமைந்து உள்ள சித்ரகுப்தன் கோயிலில் காலையில் மகா அபிஷேகமும், மாலையில் திருமணமும் நடைபெறுகிறது. அன்று இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரகுப்தனை பூஜிப்பதாக ஐதீகம். சித்ரகுப்தனை தரிசித்தால் கேது உபாதையிலிருந்து நிவாரணம் பெறலாம்! அம்பிகையின் ஆலயங்களில் குளிர்ச்சி செய்வதன் மூலம் அம்பிகையின் சீற்றத்தால் தோன்றும் சின்னம்மை போன்றவை ஏற்படாது என்பது ஐதீகம். அதனால் அம்மன் ஆலயங்களில் குளிர்ச்சி பெரு விழாவாக கொண்டாடப்படுகின்றது. சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் சித்தர்களும் ஞானிகளும் சூட்சுமமாக வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம். ராஜபாளையம்-அயன்கொல்லங் கொண்டான் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சித்ரா பெஜர்ணமியை ஒட்டி நடக்கும் சக்தி பூஜையில் அலகு பூஜை செய்வர். காஞ்சி வரதராஜபெருமாளை பிரம்மதேவன் பூஜிப்பார். பிரம்மன் வரதராஜருக்கு நிவேதிக்கும் பிரசாதம் கமகமவென மணம் வீசுமாம். உண்ட திருப்தியை வரதனின் வதனத்தில் காணலாம் என்கிறார்கள் பட்டர்கள். தேனி மாவட்டத்தை அடுத்து, தமிழக-கேரள எல்லையில், ஐயாயிரம் அடி உயரமான மலைமீது உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே கூவாகத்தில் அரவான்கள் பலி உற்சவம் திருநங்கைகளால் சித்ரா பெஜர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திருநங்கைகள், இந்நாளில் கூவாகத்தில் ஒன்று கூடுவார்கள்! சித்திரை மாத பெளர்ணமியன்று விளக்கேற்றி வைத்து, அம்பிகைக்குப் பூப்போட்ட வஸ்திரம் அணிவித்து, நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் அணிவித்து, பூஜைகள் செய்து, பலவித அன்னங்கள், பாயசம், பானகம், மற்றும் ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய குழந்தை பாக்கியம் கிட்டும். மரண பயம் நீங்கும். நம் பாவக் கணக்கை எழுதும் சித்ர குப்தனின் பிறந்த நாள் சித்ரா பெளர்ணமி. அன்று சித்ரகுப்தனுக்கு விரதமும் அனுஷ்டிக்கப்படுகறது. அதனால் சித்ர குப்தனின் அருளும் கிட்டும். அன்று உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து விரதம் இருந்து, ஒரு மூங்கிலிலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், நோட்டுப் புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது. இத் தினத்தில் அம்பிகை கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலும் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் கூழ் ஊற்றுவதும் இடம்பெறுகின்றது. சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெளர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் அம்பிகையை முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். பெளர்ணமி அன்று இல்லத்தில் பூஜை செய்த பின்பு ஆலய தரிசனம் செய்வது உத்தமமாகும். அதிலும் ஆலயங்களில் குங்கும அர்ச்சனை செய்து ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து அம்பாளை வழிபடுபவர்களுக்கு சகல சித்திகளும் கிட்டும். இறைவன் திருவருள் சக்தி வழிபாட்டில் மேலும் சிறக்கும். சித்ரா பெளர்ணமி அன்று இந்திரனையும் பூஜிப்பர். தேவர்களின் தலைவனான இந்திரன் ஒருமுறை குரு வழிகாட்டுதல் இல்லாததால், பல பாவங்கள் செய்தான். பின்னர், தன் பாவங்கள் அகல பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அவ்வாறு வருகையில் ஓரிடத்தில் தன் பாவங்கள் எல்லாம் நீங்கியதை உணர்ந்தான். அந்த இடத்தில் ஒரு பொற்றாமரைக் குளமும் சிவ லிங்கமும் இருப்பதைக் கண்டான். சிவலிங்கத்திற்குக் கோயில் கட்டி அருகே இருந்த குளத்தில் இருந்து பொற்றாமரைகளை எடுத்து லிங்கத்திற்கு பூஜை செய்தார். இந்த சம்பவம் நடந்த இடம் மதுரை. இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரா பெளர்ணமி அன்று இந்திரனுக்கு பூஜை உண்டு. காஞ்சிபுரத்திற்கு அருகில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலத்தில் உள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி நடவாவிக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது. இந்தப் பெரிய கிணற்றில் சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாளை எழுந்தருளுவார்! மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.