logo
home ஆன்மீகம் ஜூலை 26, 2017
திருத்தணி முருகனை நினைத்தாலே நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்
article image

நிறம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று புராணங்கள் கூறினாலும், ஒருசில குறிப்பிட்ட தலங்களில் வீற்றிருக்கும் குமரனின் சக்தி மிக அபரிமிதமானதாக இருக்கும அந்த வகையில், மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம்.‘திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலோ... தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ... தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.
‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று ஸ்ரீமுருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யார்.
தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது.
தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
பலபெயர்களும் அதன் சிறப்புகளும்:
ஸ்ரீசுப்பிரமணியர் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி, செல்வங்கள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூரணகிரி, உலகின் மூலாதாரமான ஈசனே தணிகாசலனை இங்கு பூஜித்ததால் மூலாத்திரி, பக்தர்களின் கோரிக்கைகள் நிமிடத்தில் நிறைவேறும் தலம் ஆதலால் க்ஷணிகாசலம், இங்கு நாள் தோறும் கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி, முருகப் பெருமான் பிரணவப் பொருளை உரைத்த தலம் ஆதலால் பிரணவதான நகரம், இந்திரன் வரம் பெற்ற தலம் ஆதலால் இந்திரநகரி, நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்ரியம், அகோரன் என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரகல்வயைப்ரமம், நீலோற்பல மலர்கள் நிறைந்த இடமாதலால் நீலோத்பலகிரி, கழுநீர்க் குன்றம் மற்றும் நீலகிரி, கல்பத்தின் முடிவிலும் அழியாத தலம் ஆதலால், கல்பஜித் என்றும் பெயர் பெற்றது.
திருத்தணிகை. உற்பலகிரி, செங்கல்வகிரி, சாந்தரகிரி, நீலகிரி, குவளைச் சிகரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.
திருத்தணி முருகப் பெருமானை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.
சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மைந்தனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவனார், வீர அட்டகாசமாகச் சிரித்ததால், வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். இவர் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவீரட்டா னேசுவர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வட கரையில் உள்ளது.
நந்தியாற்றின் தென்கரையில் ஆறுமுக சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்குள்ள முருகப் பெருமானே சிவபெருமானுக்கு உபதேசித்ததாக ஐதீகம். இங்கிருந்த ஆறுமுக சுவாமி, தற்போது திருத்தணி மலை மீது உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருவதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியரை, ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் சூரியன் வழிபடுவது கண் கொள்ளாக் காட்சியாகும். சூரியனின் கிரணங்கள் (ஒளி) முதல் நாள் சுவாமியின் பாதங்களிலும், 2-ஆம் நாள் மார்பிலும், 3-ஆம் நாள் சிரசிலும் விழுவது அற்புதம்.
நந்தியாற்றின் கரையில் உள்ள வீரராகவஸ்வாமி திருக்கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்று. ஸ்ரீமகாவிஷ்ணு, திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பங்குனி உத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் கூடிய நன்னாளில் இதில் நீராடி தணிகை முருகனை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.