logo
home ஆன்மீகம் ஏப்ரல் 18, 2016
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம்
article image

நிறம்

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார். 'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ''ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார். ''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன். ''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன். ''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன். அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார். ''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷ£த் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன். ''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார். ''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.