logo
home ஆன்மீகம் அக்டோபர் 24, 2022
சூரிய கிரகணம் என்றால் என்ன, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
article image

நிறம்

கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகிய கோள்களில் ஏற்படும் ஒருவித மாற்றத்தையும், இந்த மாற்றத்தால் பூமிக்கும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் தடையை குறிப்பதாகவும் இருந்தாலும், இந்த தடையால் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஒருசில தீய விளைவுகள் ஏற்படும் என்பதையும் குறிப்பதே கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

விஞ்ஞான காலத்தில் கிரகணங்கள் என்பவை அதிசய நிகழ்வு. சூரிய சந்திர கிரகணங்கள் பற்றி பல புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக சில உண்மைகளும் உள்ளன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைப்பதே கிரகணம் ஆகும்.

அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளில் பார்க்க முடியும். கிரகணத்தின் போது வெளிப்படும் எதிர்மறை ஆற்றல், கோவிலுக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலைத் தூண்டும். வடிவமைப்பில் உள்ள சிறப்பு ஆற்றலின் ஒளியின் மீது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கிரகணத்தின் போது அனைத்து கோவில்களின் கதவுகளும் மூடப்படுகிறது.

இதை ஒருவகையில் புண்ணியக்காலம் என்றும் கூறலாம், முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்பதற்கு இணங்க, பூமியில் உள்ள தீய ஒருசில நச்சுக்களை, இந்தக் கால நேரத்தில் நிகழும் கிரகணங்கள் வேறோடு அழித்து பூமிக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் கூறலாம். எனவே இதனை மனிதகுலமே மேன்மையடையக்கூடிய நாள் என்றும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அக்காலத்தில் கிரகண நாட்களை வெகு ஜாக்கிரதையாக கையாண்டனர் நமது முன்னோர்கள். க்ரஹணத்திற்கு முன் மூன்று நாட்கள் ஆகாரத்தில் கூடுதலாக பல விஷயங்களை கடைபிடித்து வயிற்றை முழுவதுமாக நிறப்பாமல் பட்டினியிருந்தனர்.

காலச் சூழல் மாறிப்போகும்போது, 10மணிநேரம்,  12மணிநேரம் பட்டினியை கடைபிடித்து வந்தனர். பொதுவாக க்ரஹணகாலத்தில் வயிறுகாலியாகயிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை தற்போது அனைவரும் கடந்துவிட்டோம்.

 

வேதத்தில் கிரகணத்தை ஒருவகையில் சுத்தமில்லாத தீட்டு என்று குறிப்பிட்டுள்ளது.

“சர்வேஷாமேவ வர்ணாணாம் சூதகம் ராஹுதர்சனே”

அதாவது, உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் சூரிய, சந்திர கிரகணம் என்பது தீட்டு காலம் என்று கூறப்படுகிறது, (அசுத்தம் என்பதை தீட்டு என்று குறிப்பிடப்படுகிறது), இந்த காலத்தில் மனிதர்களுக்கு எதுவும் சுத்தமானதாக கிடைக்காது. காற்று முதற்கொண்டு அனைத்திலும் மாசு கலந்திருக்கும்.

எனவே சூரிய, சந்திர கிரகணங்கள் முடிந்ததும், அனைவரும்  கட்டியதுணியுடன் குளிக்கவேண்டும். குறிப்பாக இந்த கிரகணம் காலம் முடியும் போது உலகில் உள்ள அனைத்து நதிகளும், நீர்நிலைகளும், கங்கை நதிக்கு சமமான புண்ணியத்துடன் விளங்குவதாக ஐதீகம்.

எனவே கிரகணம் முடிந்ததும், வாய்ப்பு கிடைப்பவர்கள், வீட்டில் குளிப்பதைக் காட்டிலும், ஏதாவது ஒரு நீர் நிலையில் குளித்து எழுந்தால், கங்கையில் குளித்த புண்ணியங்கள் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

சர்வம் கங்காசமம் தோயம் சர்வம் வ்யாச சமா த்விஜா:

சர்வம்பூமி சமம் தானம்  க்ரஹணே சூர்ய சந்த்ரயோ:

கிரகண காலம் முடிந்ததும் செய்யும் அனைத்து தானங்களும், பூமி தானம் செய்த பலனைத் தரும் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கிரகணம் முடிந்ததும் குளித்தபின், சூடான உணவையே சாப்பிட வேண்டும் என்றும் முன்னோர்கள் வழிவகுத்துள்ளனர்.

கிரகண நேரத்தில் ஒருசிலவற்றை செய்வதால் ஏற்படும் கேடுகளைப் பற்றி  “தர்மசிந்து” என்ற தத்துவத்தில் நமது முன்னோர் சிலவற்றை குறிப்பாக சொல்லியுள்ளனர். 

“சூர்யேந்து க்ரஹணம் யாவத் தாவத் குர்யாத் ஜபாதிகம் 

நஸ்பேன்ன ச புஞ்ஜீத ஸ்நாத்வா புஞ்ஜீத முக்தயோ:” 

என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது.....

கிரகண நேரத்தில் தூங்கினால் வ்யாதி (சயனே க்ருதே ரோக:) ஏற்படும்.

மூத்ரே தாரித்ரம் - முடிந்த அளவு நமது உடல் கழிவுகளை கட்டுப்படுத்த வேண்டும், கிரகண நேரத்தில் சிறுநீர் அடிக்கடி கழித்தாலும் உடலுக்கு தரித்ரம் ஏற்படும். அதேப்போன்று மலம் கழிக்கும் எண்ணம் தூண்டப்படும், அவ்வாறு மலம் கழித்தால் கிருமிகள் உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாலும் இக்காலத்தில் உடல் கழிவுகளை அகற்றுவதில் கூட கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

கிரகண நேரத்தில் உடலில், தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டால் குஷ்டம் (அப்யங்கே குஷ்டௌ) ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

கிரகண நேரத்தில் சாப்பிட்டால்  (போஜனே நரக இதி) நரக வேதனை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிரகண நேரம் என்பது நமது வாழ்வியல் முறையையே மாற்றியமைக்கும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக பிறப்பு இறப்பு தீட்டு உள்ளவர்கள் தர்ப்பணம், ஜபம் செய்யக் கூடாது என்று கூறப்படும், ஆனால் கிரகண நேரத்தில் பழைய தீட்டுக்கள் மக்களை பாதிக்காது என்பதால், கிரகண நேரத்தில் மட்டும் இறப்பு, பிறப்பு தீட்டு உள்ளவர்களும் ஜபம் செய்யலாம், தர்ப்பணம் கொடுக்கலாம் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும்...

க்ரஹண நேரத்தில் மந்திரத்தை குரு ஸ்தானத்தில் உள்ளவர்களிடமிருந்து உபதேசமாக பெற சிறந்த காலமாகவும் பயன்படுத்தலாம்.

கிரகணகாலம் முடிவடைந்ததும்  குளிப்பதை அனைவரும் பின்பற்றினாலும், உடல்நிலை பாதித்தோர் க்ரஹணத்தன்று அவசியம் வெந்நீரில் மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் தலை நனைய குளிக்கவேண்டும்.