logo
home வழிபாட்டுத் தலங்கள் ஜனவரி 15, 2019
குளத்தில் குடிகொண்ட அத்தி வரத பெருமாள்
article image

நிறம்

40 வருடம் ஜலவாசம், 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி, பின்பு மீண்டும் ஜலவாசம். இது தொடர்ந்து தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே இரண்டு குளங்கள் உள்ளன. இதில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள். இவர் ஜலவாசம் செய்யும் இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி (மரத்தினால் செய்யப்பட்டது) மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து, பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர். பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார். வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்குசேவை சாதிப்பார்... நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் (குளத்தில்) சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார். இந்த வைபவம், 1939 ஆண்டும், 1979 ஆண்டும் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்று திரும்பினர். இந்த வைபவம் அடுத்த வருடம் (2019-இல்) காஞ்சியில் நடைபெறவுள்ளது. 15.07.2019 ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிக்க அமிர்தசரஸ் குளத்திலிருந்து வெளியே வரவிருக்கிறார். தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த அற்புத வைபத்தில் அவசியம் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் ஆசியை பெறுவோம்.