logo
home பலன்கள் அக்டோபர் 23, 2019
மனதின் எண்ணங்களை வளம்பெறச் செய்ய உதவும் ‘கோமதி சக்கரம்’
article image

நிறம்

ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.
கோமதி சக்கரம் என்பது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது கோமதி சக்கரம்.
கோமதி சக்கரத்தின் சிறப்பு
வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம். கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும். வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம். கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது. ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன. கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன. கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.