logo
home ஆன்மீகம் செப்டம்பர் 21, 2017
மணல் பொம்மையில் பூஜித்தால் சகல நன்மை கிடைக்கும்: தேவிபுராணம் கூறும் கொலுவின் சிறப்புகள்
article image

நிறம்

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, நோன்பு இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். “ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்." என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். 1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்) 2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்) 3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்) 4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்) 5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்) 6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்) 7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள். 8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள். 9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர். இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும். - கல்பனா வெங்கட்ராமன், பாலக்காடு, கேரளா. போன்: 09495708892