logo
home ஆன்மீகம் அக்டோபர் 08, 2016
துர்க்கையின் பல வடிவங்கள் மற்றும் நவதுர்க்கையின் அற்புதமான பெருமைகள்
article image

நிறம்

துர்கை வழிபாடு, மிகத் தொன்மையானது. சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக  துர்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். துர்கை என்பது பரப்பிரஹ்மத்தின் சகுண சக்தியின் ரூபம். துர்கையின் திருக்கரங்களில் இருக்கும் சூலம் ஞானத்தையும், சிம்மம் தர்மத்தையும், திருப்பாதங்களின் அடியில் இருக்கும் மஹிஷன், காம, குரோதங்களையும், அம்பிகையின் முக்கண்கள் மூன்று காலங்களையும் குறிக்கின்றன.
கணபதியின் ஒரு திருவடிவம், துர்கா கணபதி என்பதாகும். 'ஸ்கந்தமாதா' என்பது துர்கையின் திருநாமங்களில் ஒன்று.  ஜ்வாலா துர்கா மந்திரத்தில் ஸ்ரீதுர்கை, 'ஆதி விஷ்ணு ஸோதரி' என்று அழைக்கப்படுகிறாள். ஸப்தசதீ ஸ்லோகத்தின் மூலமாக, சிவ, சக்தி ஐக்கிய பாவம் நன்கு விளங்கும். ஆகவே, துர்கையின் உபாசனையால் அனைத்துத் தெய்வங்களும் மகிழ்ச்சியடைகின்றன என்பது நன்கு புலனாகும். பொதுவாக, சைலபுத்ரி, பிரம்மசாரினீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்பனவே நவதுர்கை வடிவங்களாகக் குறிக்கப்படுகின்றன. குமாரி பூஜா முறையின்படி, குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்ரா என்பவையே நவதுர்கை வடிவங்களாகக் குறிக்கப்படுகின்றன.
மூல துர்கையே, சர்வ தேவதைகளின் சக்தி அம்சங்கள் ஒருங்கிணைந்த வடிவமாகத் தோன்றியவள். ஸ்ரீ துர்கா மஹாலக்ஷ்மி, மஹிஷாசுரமர்த்தினி எனப் திருநாமங்கள் கொண்டவள். அனைத்து ஆபத்துகள், மற்றும் பயங்களிலிருந்து உயிரினங்களைக் காத்து ரக்ஷிப்பவள்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில், ஸ்ரீ துர்கா உபாசனை, கன்ம மலத்தை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. கன்ம மலத்தை வெல்வதற்கு ஸ்ரீ துர்கா உபாசனையன்றி வேறொரு மார்க்கம் இல்லை. அதாவது, நாம் முன் செய்த வினைகளின் விளைவுகளையே பிறவிகள் எடுத்து அனுபவிக்கிறோம். இந்த வினைச் சுமை தீர துர்கை உபாசனையே உதவும். 
இந்தத் திருவடிவங்கள் குறித்து, நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, அதிகம் பேசப்படாத, வேறு வகையான நவதுர்கை வடிவங்களும் உள்ளன. அதன்படி, கீழ்க்கண்ட மூர்த்திகளே நவதுர்கை வடிவங்கள்.
1.வனதுர்கை,
2.சூலினி துர்கை,
3.ஜாதவேதோ துர்கை,
4.சாந்தி துர்கை,
5.சபரி துர்கை,
6.ஜ்வாலா துர்கை,
7.லவண துர்கை,
8.தீப துர்கை,
9.ஆசுரி துர்கை.
வனதுர்கை:
அகத்திய மாமுனி, விந்திய மலையில் கர்வத்தை வனதுர்கா தேவியின் துணை கொண்டே அடக்கினார். அகத்தியர், சிவபெருமான் ஆணையை ஏற்று, தென் திசை நோக்கி வந்தபோது, விந்திய பர்வதம், அவரது பயணத்திற்கு இடையூறாய் நின்றது. அகத்தியர் வழி விடுமாறு  கேட்ட போதும் அது வழி விடவில்லை. ஆகவே, வனதுர்கா தேவியை தியானித்து, தனக்கு சக்தி வழங்குமாறு பிரார்த்தித்தார். வனதுர்கா தேவியும் அருள் செய்தாள். அகத்தியர், தன் கரத்தை, விந்தியத்தின் கொடுமுடி வரை நீட்டி, அதை கீழே அமுங்குமாறு செய்தார். இவ்வாறு, விந்திய வனத்தில், அகத்தியருக்கு அருள் செய்ததால், வனதுர்கா எனப் பெயர் பெற்றாள் துர்கை. தன்னைச் சரணடைந்தவர்களை, சம்சாரமாகிய காட்டில் இருந்து காப்பவள் என்பதாலும் வனதுர்கை என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் கருதலாம்.
மேலே கண்ட ஒன்பது துர்கையரின் வடிவமாக, நவதுர்காத்மிகாவாகத் திகழ்கிறாள்  வனதுர்கை. வன என்பதைத் திருப்பிப் போட்டால் 'நவ' என்றே வரும். வனதுர்கை மிகவும் அழகு படைத்த சாந்த தேவதையாகவே அறியப்படுகிறாள். 'கொற்றவை' எனப் பழந்தமிழர்கள் வழிபாடு செய்த தேவதை வனதுர்கையே.   ஸ்ரீ  பாஸ்கரராயர் அருளிய 'ஸௌபாக்கிய பாஸ்கரம்' என்னும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தில், மஹா ஸ்ரீ வித்யா, வனதுர்கையின் உபாசனையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தில், கதிராமங்கலம் என்னும் திருத்தலத்தில் வனதுர்கா தேவி கோவில் கொண்டு திருவருள் புரிகிறாள்                        
சூலினி துர்கை:
சிவனாரின் திரிபுர ஸம்ஹாரத்தின் பொழுது, சூலம் ஏந்திய கரத்தினளாக அவருக்குத் துணை நின்றவளே சூலினி துர்கை.  திரிசூலம் என்பது மும்மூன்றாக உள்ள தத்துவங்களை எல்லாம் குறிப்பிடுவதாகும் (உதாரணம்: இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, சத்வ, ரஜோ, தமோ குணங்கள்).
சூலினி யந்த்ர பூஜை மிக மகிமை வாய்ந்தது. த்ரிபுர ஸ்ம்ஹாரம், அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான திருவதிகையில் நிகழ்ந்ததாக ஐதீகம். அங்கு உள்ள அம்மனின் திருநாமம் திரிபுரசுந்தரி. இவர் சூலினி துர்கையின் அம்சமாகவே வழிபடப்படுகிறார்.                        
ஜாதவேதோ  துர்கை:
அக்னிக்கு ஆதாரமாக உள்ள சக்தியே ஜாதவேதோ துர்கை. தேவர்களுடைய உக்ரமான சங்கல்பத்தில் அவர்களுடைய தேஜஸ்ஸூகளெல்லாம் ஒன்றிணைந்து சண்டி பரமேஸ்வரியாக, ஜாதவேதோ துர்கையாக  என‌ உருவெடுத்தது புராணங்கள் கூறுகின்றன.
திருமுருகன் அவதார நேரத்தில், சிவனாரின் ஆறு திருமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவற்றை, கங்கையில் சேர்க்குமாறு, பரமன் அக்னிபகவானுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவரோ, அந்த தீப்பொறிகளின் கனத்தையும் வெப்பத்தையும் தாங்க மாட்டாமல் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
அப்போது சிவனார், அந்தத் தீப்பொறிகளைத் தூக்க அக்னி பகவானுக்கு வலிமையை அருளினார். அக்னி பகவானும், இலகுவாக அவற்றைத் தூக்கிக் கொண்டு கங்கையிடம் சென்றார். உண்மையில் அக்னிபகவான் அவற்றைத் தூக்கும் முன்பாக, துர்கா தேவி அத்தீப்பொறிகளுள் பிரவேசித்தாள். ஜாதவேதோ துர்கையே அக்னி ஸ்வரூபமாய் இருந்து அத்தீப்பொறிகளைத் தூக்கிச் சென்றாள். அதனாலேயே துர்கா தேவிக்கு 'ஸ்கந்தமாதா' என்னும் திருநாமம் ஏற்பட்டது.                        
சாந்தி துர்கை:
இன்றைய அன்றாட வாழ்வின் அவசியத் தேவையான நிம்மதியை, மனச்சாந்தியை அருளுபவள் சாந்தி துர்கையே. துர்வாச முனிவர், சாந்தி துர்கையின் வழிபாட்டினாலேயே கோபத்தைக் கைவிட்டார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சாந்தி துர்கையை வழிபடுவதன் மூலம், கடன், நோய், செய்வினை தோஷங்கள் போன்ற பல ப்ரச்னைகள் நீங்கும். பட்டீஸ்வரத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ துர்கா தேவி சாந்தி துர்கையாகவே கருதப்படுகிறாள்                        
சபரி துர்கை(சாபரீ துர்கை):
அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறத் தவம் இருந்த போது, அவன் தவத்தை கலைக்க வேண்டி, துரியோதனன் முகன் என்ற அசுரனை அனுப்பினான். அவனை  அழிக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நான்கு நாய்கள் ரூபமாக ஆக்கிக்கொண்டு, சிவனார் வேட்டுவக்கோலத்துடனும், அம்பிகை வேட்டுவச்சியின் கோலத்துடனும் சென்று அந்த அசுரனை வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
மேலும், இறைவன், பாசுபதாஸ்திரம் பெற அர்ச்சுனனுக்குத் தகுதி இருக்கிறதா எனச் சோதனை செய்யும் எண்ணத்துடன் வந்ததால், அவனை, சிவனார் அதிகமாக சோதனை செய்யாவண்ணம் தடுப்பதற்காக, கருணை உள்ளம் கொண்டு அன்னையும் உடன் வந்தாள்
அப்படி, வேட்டுவச்சியின் திருக்கோலத்துடன் வந்த‌  அம்பிகை ஸ்ரீ சபரி துர்கையாகத் தியானிக்கப்படுகிறாள். மயிற்பீலியை தலையில் சூடிக்கொண்டு, திருக்கரங்களில் வில் அம்பு ஏந்தி, காதுகளில் பனை ஓலை(தாடங்கம்) அணிந்து,  மரவுரி அணிந்த திருக்கோலத்தில் அம்பிகையை தியானம் செய்வது தீராத வினை தீர்க்கும் என்பது ஐதீகம். சாபரீ துர்கை எனவும் இந்த துர்கை வழங்கப்படுகின்றாள்.                        
ஜ்வாலா துர்கை:
ஸ்ரீ லலிதாம்பிகைக்கும் பண்டாசுரனுக்கும் இடையே நிகழ்ந்த பெரும் போர் இரவு பகலாகத் தொடர்ந்தது. இரவு நடந்த போர், அசுர சேனைக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ஏனெனில், அசுரர்களுக்கு இரவு நேரத்தில் பலம் அதிகம். அதனால் அவர்கள், சக்தி சேனையை வஞ்சித்து போர் புரியலாயினர். இதைக் கண்ட, மந்த்ரிணீ தேவியாகிய ராஜ சியாமளாவும், தண்டினி தேவியாகிய வாராஹியும், ஸ்ரீ லலிதாம்பிகையிடம் முறையிட, அம்பிகையும், 'ஜ்வாலாமாலினி' என்ற மஹாசக்தியை அழைத்தாள்.
இந்த மஹா சக்தி அக்னி ரூபமானவள். அவளிடம், நூறு யோஜனை விஸ்தாரமுள்ள பூமியை வளைத்துக் கொண்டு, முன்னூறு யோஜனை உயரம் இருக்கும்படியான, அக்னி பிரகாரம்(வஹ்னி பிரகாரம்) அமைக்குமாறு கட்டளையிட்டாள். மேலும் அந்தப் பிரகாரத்தில், ஒரு யோஜனை தூரம் அளவுக்கு வாயிற்படிக்காக, ஜ்வாலையில்லாமல்  இருக்கட்டும் என்றும் கூறினாள். அன்னையின் ஆணையினை ஏற்று, இவ்வாறு பிரகாரம் அமைத்து உதவிய மஹாசக்தியே ஜ்வாலா துர்கையாக அறியப்படுகிறாள்.  இந்த துர்கையின் உதவியால், இரவு நேரத்தில் நடந்த போரில் பெரும் பிரகாசம் கிடைத்தபடியால், அசுரர்களின் வஞ்சனைப் போரை சக்தி சேனை எளிதில் முறியடித்தது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இந்நிகழ்வை,
'ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா'
என்று துதிக்கிறது.                        
லவண துர்கை:
கிருத யுகத்தில், மது என்ற பெயருடைய அசுரன் ஒருவன் இருந்தான். மிக நல்ல குணங்களுடைய அவன், சிவனை நோக்கிக் கடுமையான தவம் இருந்து,  அவர் சூலத்தை வரமாகப் பெற்றான். அந்தச் சமயத்தில், தன்னிடம் இருப்பது போல், தனக்குப் பின், தன் மகனான லவணனிடமும் அந்தச் சூலம் இருக்க வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வரம் பெற்றான்.
சிவனாரும், சூலம் கையில் இருக்கும் வரை, லவணனைக் கொல்ல யாராலும் இயலாது என வரமளித்தார்.
லவணன், தன் தந்தையைப் போல் அல்லாது, பல கொடுமைகள் புரிந்தான். ராவணனாலும் வெல்ல முடியாத மாந்தாதா சக்கரவர்த்தியை வெற்றி கொண்டான்.
இவ்வாறு அவன் கொடுமைகள் தொடர்ந்த சமயத்தில், ஸ்ரீராமர், அயோத்தியில் அரசு செலுத்திக் கொண்டிருந்தார். ரிஷிகளும், முனிவர்களும் அவரிடம் வந்து முறையிட, ஸ்ரீ ராமர், சத்ருக்னனை அழைத்து, லவணாசுரனை வென்று வரும்படி பணித்தார். சத்ருக்னன் போருக்குச் செல்லும் முன் ஸ்ரீ துர்கா தேவியை வழிபட்டார்.
ரிஷிகளிடமிருந்து, லவணாசுரனின் கையிலிருக்கும் சூலத்தைப் பற்றியும், அவன் வேட்டையாடும் சமயத்தில் சூலம் வைத்திருக்க மாட்டான் என்பதைப் பற்றியும் தெரிந்து கொண்ட சத்ருக்னன், அவன் வேட்டைக்கு வரும் சமயத்தில், அவனை வழிமறித்துப் போர் புரிந்து, ஸ்ரீ துர்கா தேவியின் அருளால் வெற்றி கொண்டார். அவ்வாறு, லவணனை அழிக்க உதவி புரிந்ததால் ஸ்ரீ துர்கைக்கு 'லவண துர்கை' என்னும் திருநாமம் ஏற்பட்டது.
லவணம் என்றால் உப்பு என்றொரு பொருள் உண்டு. கடலில் எப்படி உப்பானது கரைந்திருக்கிறதோ, அப்படி, பக்தனை பக்திக்கடலில், உப்பைப் போல் கரையச் செய்து இறைவனிடம் லயிக்கச் செய்பவள் என்பதாலும் துர்கைக்கு லவண துர்கை எனப் பெயர் ஏற்பட்டதாகக் கொள்ளலாம்.                        
தீப துர்கை:
நம் அனைவருள்ளும், சித் சக்தியாக, உள்ளொளியாக இருந்து பிரம்ம ஞானம் அருள்பவளே தீப துர்கை.
இந்த துர்கையின் அருளாலேயே அஞ்ஞான இருளை விரட்ட இயலும். சம்சார பந்தத்தில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கரையேற்றும் அருட்கடல் இவளே.
நாம் அன்றாடம் தீபமேற்றும் போது, நம் மனதில் அடர்ந்திருக்கும் அஞ்ஞான இருளை விரட்டுமாறு அம்பிகையை வேண்டிக் கொண்டே தீபமேற்ற வேண்டும். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தீபமாக ஒளிரும் ஜோதி ஸ்வரூபமே தீப துர்கை  என ஸ்ரீ தீப துர்கா ஜப விதானம் கூறுகிறது.
இந்த அம்பிகையை முறையாக உபாசிப்பவர்களுக்கு, அம்பிகையின் அருளால், தீப ஒளியில், முக்காலமும் தெரியும்  என்று கூறப்படுகிறது.                        
ஆசுரி துர்கை:
தூய்மையான வெண்மை நிறத்தவளாக ஆசுரி துர்கை தியானிக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, திருமால் மோஹினி அவதாரமெடுத்து, அமுதத்தை அசுரர்கள் அடையாத வண்ணம் செய்து தேவர்களுக்கு வழங்கினார்.
இவ்வாறு, அமுதத்தை தேவர்களுக்கு வழங்கிய திருவுருவே ஆசுரி துர்கை எனப் போற்றப்படுகிறது. அசுரர்களை ஏமாற்றும் பொருட்டு வந்த மோஹினித் திருவுருவே ஆசுரி துர்கை என, ஸ்ரீ துர்கா பிரபாவம் கூறுகிறது. இந்த துர்கையை உபாசனை செய்பவர்களுக்கு அஷ்டமாசித்திகளும் வசமாகும் எனக் கூறப்படுகிறது.



குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 



நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை 
aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.