logo
home ஆன்மீகம் பிப்ரவரி 03, 2016
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக..!!! எளிமையான 50 வழிகள்
article image

நிறம்

1. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும். 2. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். 3. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை. 4. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும். 5. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம். 6. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். 7. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். 8. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். 9. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. 10. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும். 11. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். 12. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது. 13. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். 14. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள். 15. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும். 16. எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள். 17. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். 18. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 19. எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. 20. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். 21. தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும். 22. குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும். 23. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம். 24. பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. 25. அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது 26. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். 27. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. 28. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். 29. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது. 30. மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. 31. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது. 32. விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது. 33. கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம். 34. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும். 35. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. 36. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது. 37. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 38. பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். 39. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. 40. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது. 41. அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது. 42. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது 43. நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும். 44. பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது. 45. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும். 46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. 47. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது. 48. தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது. 49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது 50. தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.