logo
home வழிபாட்டுத் தலங்கள் செப்டம்பர் 27, 2019
அமாவாசையன்று 13 தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும் ஒரே தலம்
article image

Color
Share

மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும். பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான்.

அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி ஆகும்.
திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.

ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். "ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்" என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், "ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பித்ரு தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்" என்றார். பின்னர் அவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார்.

அங்கும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்தி நிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

காசிப தீர்த்தம், இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். அதே போல் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை காலங்களிலும் இந்த தீர்த்தத்தில் நீராடலாம்.

இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சன்னிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி உள்ளது. இரண்டாவது உள்வாசலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன. இங்கும் நந்தி சன்னிதியை விட்டு விலகியவாறு உள்ளது.

சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் உள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சன்னிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோவில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார்.

கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனியும், மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் இருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.